பெரியாறு அணை நாடகத்தை வீழ்த்திய கேரள மக்கள்..!
முல்லைப்பெரியாறு அணை (கோப்பு படம்)
கேரளாவில் லோக்சபா தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் பெரியாறு அணையினை உடைத்து விட்டு, புதிய அணை கட்டப்போவதாக கேரள அரசு ஒரு வரைவு அறிக்கையினை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. தவிர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், பெரியாறு அணையினை உடைக்கும் போது கிடைக்கும் கழிவுகளை எங்கே கொட்டுவது என்று வழிகாட்டுதல் வழங்குமாறும் கேட்டிருந்தது.
இதனை கேட்ட தமிழக விவசாயிகள் கொந்தளித்தனர். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் தலைமையில் குமுளியை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். போராட்டமும் நடத்தினர். இதனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பெரியாறு அணை நாடகத்தை கேரள மக்களும் ரசிக்கவில்லை என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் உறுதியாகி உள்ளது. பெரியாறு அணையினை இடிப்போம் என முழக்கமிட்டு, பிரசாரம் செய்து வந்த வக்கீல் ரசல்ஜோய் இடுக்கி தொகுதியில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவர் பெற்ற ஓட்டுகள் 4437 மட்டுமே. அதே சமயம் இடுக்கி தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த ஓட்டுகள் 9519. நோட்டாவை விட குறைந்த ஓட்டுகளே பெரியாறு அணையினை உடைக்க புறப்பட்டவருக்கு கிடைத்துள்ளது.
இதனை விட பெரிய விஷயம் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்டுவோம் என அறிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் கட்சி ஆலத்துார் மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகள் அனைத்தையும் இழந்து விட்டது. இதன் மூலம் கேரள மக்கள் பெரியாறு அணையினை உடைக்கும் கேரள அரசின் நாடகத்தையும், கேரளாவில் வசிக்கும் சிலரின் நாடகத்தையும் புறக்கணித்து விட்டனர் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu