ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை: தமிழக அரசு அரசாணை
பைல் படம்.
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
சீனாவை பிறப்பிடப்பிடமாக் கொண்ட கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், கடந்த 2020ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மருத்துவதுறையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மருத்துவத் துறையில் காலியாக இருந்த பணியிடங்களை துரிதமாக செயல்பட்டு அரசு நியமனம் செய்தது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும், ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செலவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 14,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த செவிலியர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்று தமிழக சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவ கல்வி இயக்குனரகம், ஊரக நலப் பணிகள் துறை உள்ளிட்டு துறையின் கீழ் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணைய செவிலியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அடுத்த 40 நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டுமென மருத்துவ குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே கடந்த 29ம் தேதி, திருப்பூர் மாநகராட்சியில் (NUHM) கீழ் செயல்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 9 நகர்புற சுகாதார மேலாளர்/பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்கள் மாநகராட்சி நலச் சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒப்பந்த செவிலியர்கள் பணிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கால கட்டத்தில் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு செவிலியர் சங்கத்தை சார்ந்த 12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியமா ரூ.56 லட்சத்தை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu