இந்தியா, சீனாவில் பருத்தி விளைச்சல் வீழ்ச்சி : நூல் விலை குறைய வாய்ப்பு இல்லை

இந்தியா, சீனாவில் பருத்தி விளைச்சல் வீழ்ச்சி :  நூல்  விலை குறைய வாய்ப்பு இல்லை
X

தேனி சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் கே.எஸ்.கே., நடேசன்.

இந்தியாவில் மழையால் இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இதனால் நூல் விலை குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா மற்றும் சீனாவில் பருத்தி விளைச்சல் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், இந்த ஆண்டு பருத்தி விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதால் நுால் விலை குறைய வாய்ப்பு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தேனி சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் கே.எஸ்.கே.,நடேசன் கூறியதாவது:

'இந்த ஆண்டு சீனாவில் பருத்தி மார்க்கெட் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பருத்தி விளைச்சலில் சீனாவுடன் கடும் போட்டியிடும் இந்தியாவிலும் பருத்தி விளைச்சல் பலத்த அடி வாங்கி உள்ளது. இந்தியாவின் ஒரு ஆண்டு பருத்தி விளைச்சல் 3 கோடியே 75 லட்சம் பேல்கள் (ஒரு பேல் 170 கிலோ) ஆகும். இதில் இந்தியாவின் உள்நாட்டு தேவையே 3 கோடியே 50 லட்சம் பேல்கள் ஆகும். இந்நிலையில் இந்தியா தனது நேச நாடுகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு பருத்தி ஏற்றுமதி செய்ய வேண்டும்.

நூல் மாதிரி படம் ( பட உதவி : விக்கிபீடியா)

இந்த ஆண்டு பருத்தி சீசன் தற்போது மும்முரமாக தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடும் விளைச்சல் பாதிப்பால் இந்த ஆண்டு 3 கோடியே 20 லட்சம் பேல்கள் தான் பருத்தி விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் மழை, வெள்ளத்தால் தரக்குறைவான பருத்தியே நமக்கு அதிகம் கிடைக்கும். எனவே, நமக்கும் பருத்தி பற்றாக்குறை அதிகம் உள்ளது. இந்நிலையில் ஒப்பந்தப்படி நேசநாடுகளுக்கும் பருத்தி அனுப்ப வேண்டும்.

அதனால் உள்நாட்டு தேவையில் ஏற்படும் பற்றாக்குறையினை சரி செய்ய அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பருத்தி கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அங்கு பருத்தி விலை விண்ணை முட்டி நிற்கிறது. ஒரு கண்டி பருத்தி விலை (370 கிலோ) நீண்ட இழை பருத்தி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். சாதாரண இழை பருத்தி ஒரு கண்டி 58 ஆயிரம் ரூபாய்.

போக்குவரத்து செலவு, கமிஷன் எல்லாம் சேர்த்து ஒரு கண்டிக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவாகும். இவ்வளவு செலவு செய்து பருத்தி வாங்கி நுால் நுாற்றால் ஸ்பின்னிங் மில்களுக்கு எப்படி கட்டுபடியாகும்? இதனால் தான் நுால் விலையினை 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். அப்படி உயர்த்தினால் மட்டுமே ஸ்பின்னிங் மில்களுக்கு கட்டுப்படி ஆகும்.

தவிர தற்போது மோடி அரசு ஜவுளித்துறைக்கு பெரும் அளவில் உதவிகள் செய்து வருகிறது. இதனால் பருத்தியோ, பஞ்சோ, நுாலோ,ஆடைகளோ இந்தியாவில் இருந்து ஏற்றுமதி அதிகமாக நடக்கிறது. இந்திய தயாரிப்புகளுக்கும், மூலப்பொருட்களுக்கும் வெளிநாடுகளில் கிராக்கி உள்ளது.

ஆனால், உள்நாட்டில் நுால் விலை உயர்வால் ஆடை உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். நெசவாளர்கள் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது. திருப்பூரில் கூட நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஸ்டிரைக் நடத்தக்கூட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனாலும் உண்மையில் நுால் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்புகள் இல்லை என்பதே உண்மை.' இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி