உதகையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

உதகையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
X

பைல் படம்.

கணவர், மாமியார் கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே முக்கிமலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், டாஸ்மாக் கடை விற்பனையாளர். இவரது 2-வது மகள் சஞ்சனாவுக்கும் (வயது 27), குன்னூர் அருகே கோடேரி பகுதியை சேர்ந்த கவுதம்ராஜ் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.

அதன் பின்னர் கணவன்-மனைவி இருவரும் கோடேரி பகுதியில் வசித்து வந்தனர். கவுதம்ராஜ் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு மனைவி சஞ்சனாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். மேலும் தாய் லதாவுடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

மீண்டும் கணவர்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் சஞ்சனா மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் வீட்டின் குளியல் அறைக்கு சென்ற சஞ்சனா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்து உள்ளார். இதில் அவரது உடல் தீப்பற்றி எரிந்தது.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டுக்குள் வந்து படுகாயம் அடைந்த சஞ்சனாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சஞ்சனா இறந்தார். இதுகுறித்து ராஜேந்திரன் மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கவுதம்ராஜ், மாமியார் லதா ஆகியோர் கொடுமைப்படுத்தியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு சஞ்சனா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!