பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்தி நாட்டில் முதலிடம்: நீலகிரி கலெக்டருக்கு விருது வழங்கிய முதலமைச்சர்
நீலகிரிக்கு இன்னொரு மகுடம்: இந்தியாவிலேயே பழங்குடியின மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தி முதன்மை மாவட்டமானதை ஒட்டி, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிற்கு, முதலமைச்சர் ஸ்டாலின், இன்று விருது வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், குறும்பர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கர், இருளர், ஆகிய பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால், மாவட்ட நிர்வாகமானது பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராமங்களில், கொரோனா பற்றிய பாதுகாப்பு குறித்து அதிகமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தது.
தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில், பெரும்பாலான கிராமங்களில் தடுப்பூசி செலுத்த பழங்குடியின மக்கள் அச்சம் தெரிவித்து தடுப்பூசி செலுத்த மறுத்து வந்தனர்.
ஒவ்வொரு கிராமங்களிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில், பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்தும், கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக முன்னெடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கை பற்றியும், எடுத்துரைக்கப்பட்டது.
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எடுத்த தீவிர முயற்சிக்கு பலன் கிடைத்தது. தற்போது இந்தியாவிலேயே பழங்குடியின மக்களுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திய, நாட்டின் முதல் மாவட்டமாக நீலகிரி பெயர் பெற்றுள்ளது. இதற்காக, சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பாராட்டுக்களையும் விருதையும் பெற்றுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu