உதகையில் பார்க்கிங் மூடல்: வாகன ஓட்டிகள் அவதி

உதகை நகர் மையப் பகுதியில் உள்ள பார்க்கிங் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

உதகை சுற்றுலாவுக்கு பெயர் போனது. வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நகரில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு உதகை ஏ.டி.சி. பகுதியில் குதிரை பந்தய மைதானத்தில் 4 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டது.

கோடப்பமந்து கால்வாய் தூர்வாரும் பணியின் போது, தூர்வாரப்பட்ட மண் வாகனம் நிறுத்துமிடத்தில் குவியலாக கொட்டப்பட்டது. மேலும் பெரிய குழாய்கள் இறக்கி வைக்கப்பட்டு உள்ளன. லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் சென்று வந்ததால் இப்பகுதி குண்டும், குழியுமாக மாறியது.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வாகன நிறுத்துமிட நுழைவுவாயில் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் வாகனங்களை நிறுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்