உதகை: வியாபாரி மகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி
ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்ற சுவாதி.
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்தவர் தியாகராஜன், வியாபாரி. இவரது மனைவி லட்சுமி, அஞ்சலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களது மூத்த மகள் சுவாதி ஸ்ரீ, வயது 24. இவர் தனது பள்ளிக் கல்வியை உதகை, குன்னூரில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்து முடித்தார்.
பின்னர் தஞ்சாவூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண்மை பட்டப்படிப்பு படித்தார். அதன் பின்னர் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்காக படித்து வந்தார். இதற்காக சென்னையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்றார். கடந்த ஆண்டு இந்திய ஆட்சி பணிக்காக நடந்த தேர்வை சுவாதி எழுதினார். அந்த தேர்வின் முடிவுகளை மத்திய ஆட்சி பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த 24-ம் தேதி வெளியிட்டது.
இதன் முடிவில் சுவாதி தமிழக அளவில் 3-வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். மேலும் இந்திய அளவில் 126-வது இடம் வகித்தார். ஐ.ஏ.எஸ். தேர்வில் உதகையை சேர்ந்த இளம்பெண் தேர்வாகி இருப்பதற்கு குடும்பத்தினர் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சுவாதி கூறியதாவது: நான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்காக 2 ஆண்டுகளாக கடின முயற்சியுடன் படித்து வந்தேன். முதலில் எழுதிய தேர்வில் தோல்வி அடைந்தேன். அப்போது பெற்றோர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தனர். இதன் மூலம் 2-வது முறையாக முழு நம்பிக்கையோடு தேர்வு எழுதியதில் தேர்ச்சி பெற்றேன். எனக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், வழிநடத்திய ஆசிரியர்கள் என அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
குறிப்பாக நான் தேர்வு எழுதுவதற்கு முன்பு நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதுவதில் உள்ள கடினங்கள், அதற்கு தயாராவது குறித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. அவர் வழங்கிய அறிவுரைகள் வெற்றிக்கு ஊக்கமளித்தது. நான் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, மக்களுக்காக சிறப்பாக பணிபுரிவேன். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu