உதகை பூங்காவில் 3 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்ய இலக்கு
இயற்கை உரம் உற்பத்தி செய்யும் இடம்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த மலர் செடிகள், பல வகையான அலங்கார செடிகள் மற்றும் நூற்றாண்டு பழமையான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்கா மேல்பகுதியில் இயற்கை உரம் தயாரிக்க கால்நடைகளை வளர்க்க கொட்டகை அமைக்கப்பட்டது. அங்கு 2 பசு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம் சேகரித்து வைக்கப்பட்டு தொட்டியில் நிரப்பப்படுகிறது. பூங்காவை தினமும் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் போது கீழே விழுந்த இலைகளை அகற்றி உர தொட்டியில் கொட்டுகின்றனர். ஓராண்டாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவிக்கையில்,
தாவரவியல் பூங்காவில் கால்நடை வளர்ப்பின் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 3 டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை ஒரு டன் உற்பத்தி செய்து, அந்த ஒரு டன் இயற்கை உரமும் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் போன்றவற்றுக்காக இயற்கை உரம் வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ, 2 கிலோ, 5 கிலோ பைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. பூங்காவில் கோடை சீசன், 2-வது சீசனுக்காக நர்சரியில் விதைப்பு பணிகள், நாற்றுகள், செடிகள் பராமரிப்பு பணிக்கு இயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது. உதகையில் நிலவும் சீதோஷ்ண காலநிலையால் உரமாக இரண்டரை மாதம் ஆகிறது. இயற்கை உரம் தேவைப்படும் விவசாயிகள் முன்கூட்டியே தெரிவித்தால் உற்பத்தி செய்து தரப்படும் என அதிகாரிகள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu