முதுமலை அருகே சாலையில் திரிந்த புலி : பொதுமக்கள் 'கிலி'

நீலகிரி மாவட்டம் கர்நாடக எல்லையில், ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால், புலிகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது .

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், அதனை ஒட்டி உள்ள கர்நாடக மாநில எல்லையில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு புகழ் பெற்ற ஸ்ரீ ஹிமவத் கோபால சுவாமி மலை உள்ளது. இந்த மலையில் உள்ள கோயிலுக்கு எப்போதும் மக்கள் தரிசனத்திற்காக அதிகமாக வருவார்கள்.

தற்போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், இந்த கோயிலுக்கு பக்தர்கள் யாரும் வருவதில்லை. மக்கள் நடமாட்டமின்றி கோவில் பகுதியும் சாலைகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் வன விலங்குகள் சாலையில் உலவுகின்றன.

அப்பகுதி சாலையில், புலி ஒன்று மழையில் நனைந்தபடி ஒய்யாரமாக உலாவந்த காட்சியை அங்கிருந்த வன ஊழியர் தனது கேமராவில் படம் பிடித்தார். உதகை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஊரடங்கால் போக்குவரத்து குறைந்ததன் எதிரொலியாக, மான்கள், காட்டெருமை, மயில்கள் என ஆங்காங்கே ரோட்டிலேயே வனவிலங்குகள் உலா வருவது கண்கொள்ளாத காட்சியாக உள்ளது. எனினும், புலி நடமாட்டம் குறித்த தகவல் எட்டியதும் அப்பகுதியினர் பீதிக்குள்ளாகினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!