ஊட்டியில் மோகன் பகவத் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். தேசிய நிர்வாகிகள் கூட்டம்
மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆண்டுதோறும் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பகுதிகளில் இந்த கூட்டமானது நடத்தப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் ஊட்டியில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நேற்று கோவை வந்தார். நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் கார் மூலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்றார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார். ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமை தாங்கினார்.
இன்று தொடங்கிய கூட்டமானது ஒரு வார காலத்திற்கு நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், தமிழகத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள், அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த ஒரு ஆண்டு காலத்தில் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஒரு வருட காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செய்த சாதனைகள், எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்தும் நிர்வாகிகள் விவாதித்தனர். மேலும் இதில், அடுத்த ஒரு வருடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்படி செயல்பட வேண்டும் மற்றும் ஒராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்தும் ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறினர்.
இதுதவிர அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு தொடங்க உள்ளதாலும் அதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், புதிய உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, தினசரி சகாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே நேரடி தொடர்பை வலுப்படுத்துதல், அதிகளவில் பயிற்சி முகாம்களை நடத்துதல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் 200-க்கும் அதிகமான தேசிய, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெறுவதையொட்டி, கூட்டம் நடக்கும் பள்ளியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊட்டியில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க அதன் தேசிய தலைவர் மோகன் பகவத்துடன், முக்கிய தலைவர்களும் வந்திருப்பதால் அவர்கள் தங்கியுள்ள பள்ளிக்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu