உதகையில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு நிவாரண உதவி
சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் சுமார் ஒரு லட்சம் பேர் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் 9 மாதங்கள் வருவாய் இன்றி தவித்தனர். அந்த பாதிப்பில் இருந்து சுற்றுலா தொழிலாளர்கள் மீண்டு வராத நிலையில் கொரோனாவின் 2-வது அலை காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் மீண்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடபட்டுள்ளன.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதகையில் சுற்றுலா தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு முதற்கட்டமாக காய்கறிகள், மளிகை பொருட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக நிவாரணமாக அளிக்கபட்டது. இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்போடு இணைந்து சுற்றுலா வழிகாட்டிகளுக்கு நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 400 பேர் தற்போதுவரை கொரோனா தொற்றால் சிகிச்சையில் உள்ளனர். பரிசோதனை எண்ணிக்கை 1200-ல் இருந்து 1300 ஆக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரளா, கர்நாடக சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்க்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். தொடர்ந்துபேசிய அவர் வெளி மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் பணி புரியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வெளி மாவட்டத்திற்க்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் இல்லாததால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் குழந்தை திருமணங்கள் குறித்த புகார் வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து நிவாரண பொருட்களை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் வாங்கி சென்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் நிவாரண பொருட்களை வழங்குவதை விட நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கிளப் மஹிந்த்ரா தனியார் அமைப்பு இளையராஜா, விஜய் குமார், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu