கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலி; ஊட்டியில் சுகாதாரத்துறை உஷார்
Nilgiri News-கேரளாவில் இருந்து ஊட்டிக்கு வருபவர்களின் உடல் நலம் குறித்து பரிசோதிக்கப்படுகிறது.
Nilgiri News, Nilgiri News Today- கேரளத்தில் நிபா வைரஸ்க்கு 2 பேர் உயிரிழந்து விட்டனர். அங்கு மேலும் 2 பேர் நோய்த்தொற்றுடன் உள்ளனர். அவர்களுக்கு கோழிக்கோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோழிக்கோடு பகுதிக்கு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் வாகனங்கள் மூலம் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். எனவே கேரளாவின் அண்டை மாவட்டமாக உள்ள நீலகிரியில் மருத்துவ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, கூடலூரில் உள்ள நாடுகாணி, சோலாடி, தாளூா், நம்பியாா்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கும் பணிகளை செய்து வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் சுகாதார ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து புறப்பட்டு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பது தொடர்பாக தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அப்படி வருவோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். எனினும், தமிழக - கேரள பகுதிகளில் சுகாதாரத்துறை உஷார் நிலையில் இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டியை போலவே, உடுமலை - கேரளா எல்லை பகுதிகளிலும் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu