உதகையில் கொட்டும் மழையிலும் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள், முகாமுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது.

அவ்வகையில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகையில் லவ்டேல் பகுதியில் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறி இருந்தது.

தடுப்பூசி முகாம் ஒருபுறம் நடக்க, மறுபுறம் மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருந்தது. எனினும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் குவிந்தனர். குடை பிடித்துக் கொண்டு, நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் காத்திருந்து, கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.

Tags

Next Story