உதகையில் தேசிய குடற்புழு நீக்கம் நிகழ்ச்சி
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கிய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.
நீலகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமின் தொடக்க நிகழ்ச்சி உதகை வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
மேலும் சத்துணவு மிட்டாய்கள் வழங்கப்பட்டது. தேசிய குடற் புழு நீக்க நாள் முதல் சுற்று இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரையும், இரண்டாம் சுற்று வருகிற 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி அல்பெண்டசோல் திரவம், 2 வயதுக்கு மேல் 19 வயது வரையும் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர அனைத்துப் பெண்களுக்கும் ஒரு நபருக்கு அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை ஒன்று வழங்கப்படுகிறது.
நீலகிரியில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு துணை சுகாதார மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 சுற்றுகளாக 429 அங்கன்வாடி பணியாளர்கள், 204 கிராம சுகாதார செவிலியர்கள், 407 ஆஷா பணியாளர்கள் மூலம் நேரடியாக மாத்திரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 88 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர அனைத்து பெண்களும் பயன்பெறுவார்கள்.
இதன் மூலம் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதோடு, ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் தகுதி வாய்ந்த பெண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தேவகுமாரி, ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா ரானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu