மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வந்தடைந்த மலை ரயில்
மலை ரயில்.
நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டைக் கடந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் பல பகுதிகளில் மண்சரிவும் ,பாறைகள் உருண்டு விழுந்ததால் மறு உத்தரவு வரும் வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதால் உதகை-மேட்டுப்பாளையம் இடையே 5 பெட்டிகள் கொண்ட மலைரயில் இன்று முதல் இயக்கப்பட்டது.
அதிகாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்தனர். உதகை வந்தடைந்த மலை ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மலை ரயிலில் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், மலைப்பாதையில் பயணித்தபோது இயற்கை காட்சிகளை கண்டு ரசித்ததும் குகைகளை கடந்து வந்ததும் புது அனுபவமாகவும், அதேசமயம் குடும்பத்துடன் இந்த பயணம் செய்தபோது எண்ணற்ற மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu