பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்தியதில் நீலகிரி முதலிடம்: வனத்துறை அமைச்சர் பெருமிதம்

பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, முதன்மை மாவட்டமாக நீலகிரி உள்ளதாக, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, உதகை நகர திமுக சார்பில், ஜீப் ஓட்டுனர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது .

நகர திமுக செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட கழக செயலாளர் முபாரக், மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று, சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு கலைஞர் விருது வழங்கி சிறப்பித்தனர். கூலித் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி போன்ற பொருட்களை வழங்கப்பட்டது.

பின்னர், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் ஏழு விதமான பழங்குடியினர் சுமார் 26 ஆயிரத்து 500 பேர் வாழ்கின்றனர். இவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்த 21 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தடுப்பு ஊசி நேற்றுடன் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய முதன்மை மாவட்டம் என்ற பெருமையை, நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது. இதற்கான விருதை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் இருந்து பெற இருக்கிறார்.

கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற, நீலகிரி மாவட்டத்தில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதி, ஆக்சிஜன் வசதி போன்றவை தயாராக உள்ளன. குழந்தைகள் சிகிச்சை பெறும் வகையில் , உதகை சிறுவர் மன்றத்தில், 120 படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings