உதகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கல்

உதகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கல்
X

பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க உத்தரவு .

உதகை தமிழகம் மாளிகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த வன உரிமைச் சட்டம் செயல்பாடு மற்றும் செயலாக்கம் தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினர். இதனைத்தொடர்ந்து பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் பேசிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழகத்தில் வாழும் 36 பழங்குடியின வகுப்பினர்களில் 6 வகுப்பினர் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், இவர்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

மேலும் நீலகிரி, கோவை, மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பழங்குடியினர் பங்கேற்ற வன உரிமை சட்ட செயலாக்கம் தொடர்பான கலந்தாய்வு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு 600 பயனாளிகளுக்கு 2 கோடியே 64 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் பேசிய அவர், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மாநில அரசு ஒதுக்கும் 85% நிதி பள்ளிகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்காகச் செலவிடப்படுவதாகவும், மீதமுள்ள 15% மட்டுமே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தச் செலவிடப்படுவதாகக் கூறினார்.

பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்க ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தாமதமின்றி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுவருவதாகக் கூறினார்.

வன உரிமை சட்டத்தினால் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயலாக்குவதில் உள்ள இடர்பாடுகளைக் கண்டறிந்து முதலமைச்சரின் ஆலோசனையுடன் சிறப்பு அனுமதி பெற்றுச் செயல்படுத்த நடவடிக்க எடுக்கப்படும் என்றார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற விழாவில், வனத்துறை அமைச்சர் திரு க. ராமச்சந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் திரு ஆ.ராசா, பழங்குடியினர் நலத்துறை இயக்கர் திரு ராகுல் சட்டமன்ற உறுப்பினர் திரு கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story
the future with ai