உதகையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க இடம் தேர்வு: ஆணையாளர்

உதகையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க இடம் தேர்வு: ஆணையாளர்
X

பார்க்கிங் வசதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம்.

ஹைட்ராலிக் முறை மூலம் கார்கள், இருசக்கர வாகனங்கள், பஸ்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.

நீலகிரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் அதிகமாக வருவார்கள். உதகை-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மலைப்பகுதி என்பதால் வாகனங்கள் சில கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கும்.

உதகை நகரில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் ஆண்டுதோறும் சீசனில் போக்குவரத்து பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்றானது. இதனால் உள்ளூர் மக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலம் உதகையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறியதாவது:

ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தில் ஒரு கோடியே 40 லட்சம் செலவில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட இருக்கிறது. ஹைட்ராலிக் முறை மூலம் கார்கள், இருசக்கர வாகனங்கள், சுற்றுலா பஸ்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சாலையோரங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் அருகே வாகனங்கள் நிறுத்தப்படுவது குறையும்.

மல்டி லெவல் பார்க்கிங் தளத்தை சுற்றி கடைகள் அமைக்கப்படும். கட்டண முறையில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படும். முதல் கட்டமாக வருவாய்த்துறையிடம் இருந்து அந்த நிலத்தை நகராட்சி பெற உள்ளது. தொடர்ந்து அரசு அனுமதி பெற்று விரைவில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கும் பணி தொடங்கப்படும். என அவர் கூறினார்.

Tags

Next Story