பறவை காய்ச்சல் எதிரொலி: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. கேரளா மற்றும் கேரளா மாநில எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகா மாநில பகுதிகளில் இருந்து கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை வாகனங்களில் ஏற்றி வருவதை கண்காணிக்க நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கக்கனல்லா, நம்பியார்குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய 8 சோதனை சாவடிகளில் ஒரு கால்நடை உதவி டாக்டர் தலைமையில், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.
பறவைக்காய்ச்சல் கோழி, வாத்து, வான்கோழி, வனப்பறவைகளை தாக்கும். மனிதரையும் தாக்க வல்லது. பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாத்து, வான்கோழி முதலிய பல்வேறு இன பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழையக்கூடாது. உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. உபகரணங்கள் மாதம் இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீல நிறம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகள் தசைகளில் இரத்த கசிவு, மூச்சுக்குழலில் அதிகச் சளி, அனைத்து உள்ளுறுப்புகள் மற்றும் கால்களின் மீது ரத்த கசிவு ஆகியவை பறவைக்காய்ச்சலின் அறிகுறிகளாகும். மனிதருக்கு காய்ச்சல், தொண்டை புண், இருமல் நோயின் அறிகுறிகள். நன்கு சமைத்த கோழி கறி மற்றும் முட்டைகளை உண்பதால் பரவாது. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.
கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டி உள்ள கர்நாடக மாநில பிற பகுதிகளிகளில் இருந்து கோழிகள், பறவைகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை நீலகிரி மாவட்டத்துக்குள் வாகனங்களில் ஏற்றி வர மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu