தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை; கடைகளுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்
Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள ‘பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை’ குறித்த அறிவிப்பு பேனர்.
Nilgiri News, Nilgiri News Today- சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க, நீலகிரி மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தடை அமலில் இருந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்த, மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னர் இந்த உத்தரவு, தமிழகம் முழுவதும் 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், தமிழகத்தில் மிக முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், ஸம்மர் சீசன் காலங்களில், ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர். வாரக்கணக்கில் இங்கு தங்கி, இங்குள்ள மலைகளை, இயற்கை காட்சிகளை, நீர்நிலைகளை, மலர்கள் பூத்துக்குலுங்கும் சோலைகளை பார்த்து ரசிக்கின்றனர். தமிழகத்தில் மிக முக்கியமான சுற்றுலா தலமாக உள்ள ஊட்டியை தூய்மையாக பராமரிக்கவும், இயற்கை வாழிடங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் கெடாமல் தடுக்கவும், மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கோவில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில், ஊட்டி நகர்நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர் நேற்று ஊட்டி பஸ் ஸ்டாண்ட் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றதாக, 20 கடைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இனிமேல் எக்காரணத்தை முன்னிட்டும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என, கடை உரிமையாளர்களை எச்சரித்துவிட்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu