வீரதீர செயல் புரிந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: உதகை மாவட்ட ஆட்சியர்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 5 வயதிற்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் மாநில விருதை அறிவித்து கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (வருகிற ஜனவரி 24-ந் தேதி) பாராட்டு பத்திரமும், ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும். இதற்கு 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை தமிழகத்தில் வசிக்க வேண்டும்.
பிறர் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயலை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வீரதீர செயல்புரிந்து இருக்க வேண்டும். இந்த தகுதி உள்ள பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வருகிற 29-ந் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu