நீலகிரியில் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

நீலகிரியில் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை
X

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரியில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் நீலகிரியில் கடந்த காலாண்டு வரை 187 பதிவுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் படி கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.1000 என வழங்கப்படுகிறது.

இந்த உதவி தொகையை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு இல்லை. இந்த பயனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளி என்ற முன்னுரிமையை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் கணக்கு எண் வைத்திருக்க வேண்டும். தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகள் இதுவரை விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பத்தை பெற்று முழு விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் கொடுத்து அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story