ஊட்டியில் விதிமுறை மீறிய 6 மினி பஸ்கள் பறிமுதல்

ஊட்டியில் விதிமுறை மீறிய 6 மினி பஸ்கள் பறிமுதல்
X

ஊட்டியில் விதிமீறிய மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஊட்டியில் விதிமுறைகளை மீறி இயக்கிய 6 மினி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரக்காடு பகுதிக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் அரக்காடு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலர் தினமும் சென்று பயனடைந்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக ஊட்டியில் இருந்து அரக்காடுக்கு செல்லும் பஸ்கள், விதிமுறைகளை மீறி எல்லநல்லியில் இருந்து அரக்காடு செல்லாமல் திரும்பி வந்தது. இதனால் அரக்காடு சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பஸ்சில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். மேலும் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதால் அவதியடைந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தனியார் பஸ்கள் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதேபோல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பாதிப்படைந்தனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் விசாரணை நடத்தினார்.

இதில் தனியார் மினி பஸ்கள் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் பாதியில் திரும்பி வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 6 தனியார் மினி பஸ்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும் பஸ்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதைததொடர்ந்து வட்டார போக்குவரத்து துறையினர் 6 பஸ்களை பறிமுதல் செய்து, ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் எல்லநல்லியில் இருந்து அரக்காடு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் தான் பஸ்கள் செல்லவில்லை என்று பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் அரக்காடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!