இந்திய ஜனாதிபதி நாளை முதுமலைக்கு வருகை; மசினகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை
Nilgiri News, Nilgiri News Today- இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு மைசூருவில் இருந்து மசினகுடிக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
Nilgiri News, Nilgiri News Today- ஜனாதிபதி திரவுபதி முர்மு, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு நாளை(சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு வருகை தருகிறார். அதன்படி அவர், டெல்லியில் இருந்து காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அருகே மசினகுடியில் உள்ள ஹெலிபேடுவிற்கு வந்திறங்குகிறார்.
தொடர்ந்து காரில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களை சந்திக்கிறார். வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தில் இடம் பிடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோரை சந்தித்துவிட்டு மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேடு, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், காரில் செல்லும் வழிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், போலீஸ் எஸ்.பி பிரபாகர், புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண் மற்றும் ஜனாதிபதி சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து முதுமலை, மசினகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வனத்துறை மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் நேற்றுமுன்தினம் முதல் மூடப்பட்டன. மேலும் நாளை வரை அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்கக்கூடாது என்று விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மைசூரில் இருந்து மசினகுடிக்கு ஹெலிகாப்டரில் வருவதையொட்டி, நேற்று காலை 9.30 மணிக்கு 2 ஹெலிகாப்டர்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதாவது மைசூரில் இருந்து மசினகுடி ஹெலிபேடுவுக்கு 2 ஹெலிகாப்டர்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு வந்து மீண்டும் திரும்பி செல்வதன் மூலம் ஒத்திகை நடந்தது. இதையொட்டி அப்பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து ஹெலிகாப்டர் ஹெலிபேடு மற்றும் வளர்ப்பு யானைகள் முகாம் பகுதியில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆலோசனை கூட்டம் பின்னர் பிற்பகல் 2 மணிக்கு தமிழக வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஜனாதிபதி வருகையையொட்டி ஆய்வு செய்து அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தலைமை முதன்மை வன உயிரின காப்பாளர் சீனிவாச ரெட்டி, கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் எஸ்.பி பிரபாகர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஜனாதிபதி வருகைக்கான ஏற்பாடு பணிகள் ,துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே கோவை உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து 900 போலீசார் முதுமலைக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மசினகுடியில் ஹெலிபேடு மற்றும் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu