வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு அபராதம்; வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
Nilgiri News, Nilgiri News Today- வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு, வனத்துறை அதிகாரிகள் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினக்குடி வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதைக் காண, வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில் காப்பகத்துக்கு உட்பட்ட சாலையில் வாகனத்தில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், ஆங்காங்கு வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுத்து செல்கின்றனர். மேலும் பலர் வனத்துக்குள் அத்துமீறிச் செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிங்காரா வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர்.
அப்போது மாவ நல்லா பகுதியில் உள்ள வனத்துக்குள் கேரளா, கர்நாடகாவை சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் அத்துமீறி நுழைந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வனத்துக்குள் அத்துமீறிச் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 4000 அபராதம் விதித்து வசூலித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அத்து மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
அத்துமீறி போனால், ஆபத்துதான்
வனப்பகுதியில், வனவிலங்குகள் அதிகளவில் நடமாடும் இடங்கள், அவை வந்து செல்லும் பகுதிகளில்தான் சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. ஏனெனில், அந்த பகுதிகளுக்குள் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்குகளால் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், வனப்பகுதிக்குள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேலே சென்றுவிட்டால், வழித்தடங்களை சரியாக கண்டுபிடித்து, மீண்டும் திரும்பி வருவது என்பது கடினம். பெரிய பெரிய மரங்கள், செடிகள், புதர்கள் நிறைந்த வனப்பகுதிக்குள் வழித்தடங்களை கண்டறிவதற்கு புதிதாக அங்கு செல்பவர்களால் முடியாது.
வனத்துக்குள் சரியான அடையாளங்களை கொண்டு வழித்தடங்களை கண்டறிந்து, புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் திரும்பி வர, தெரிந்திருப்பதும் மிக முக்கியம். இல்லையென்றால், வனத்துக்குள் காணாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது. இதுபோன்ற ஆபத்தான காரணங்களால்தான், வனத்துக்குள் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu