ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் மற்றும் பேராசிரியர் சஸ்பெண்ட்; உயர்கல்வித்துறை நடவடிக்கை

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதல்வர் மற்றும் பேராசிரியர் சஸ்பெண்ட்; உயர்கல்வித்துறை நடவடிக்கை
X

Nilgiri News- ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், முதல்வர் மற்றும் பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். (கோப்பு படம்) 

Nilgiri News- ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், முதல்வர் மற்றும் பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Nilgiri News, Nilgiri News Today-நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் 2023-24-ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது. இதில் முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, முதலில் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர். இதன் பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர்.

இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக தாவரவியல் துறை பேராசிரியர் ரவி, மாணவர்களிடம் கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் பணம் வாங்கியதாக கடந்த 14-ம் தேதி குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் புகார் பதிவு செய்து உள்ளனர். மேலும் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையடுத்து கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி கடந்த வாரம் ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நேரில் வந்து 30 மாணவ-மாணவிகள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதன்பின்னர் விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே ஊட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைக்க கல்லூரி முதல்வர் பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பிரவுன் கவரை வழங்குகிறார். அந்த கவரில் ரூ.10 ஆயிரம் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மாணவரை பார்த்து சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போது தான் இடம் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் கூறுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான நடவடிக்கையை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!