"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" வள்ளலாரின் அறநெறியே "திராவிட மாடல் அரசு" -உதகையில் முதல்வர்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் வள்ளலாரின் அறநெறியே திராவிட மாடல் அரசு -உதகையில் முதல்வர்
X
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் அறநெறியை ஆட்சி நெறியாகக் கொண்டிருக்கக்கூடியது திராவிட மாடல்அரசு -முதல்வர்



தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, நீலகிரி மாவட்ட உதகையில் நடைபெற்ற "உதகை 200" துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

உயரமான, அழகான, பசுமையான, இயற்கையான, எழிலோடு, இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இப்படி பல்வேறு சிறப்புக்களை பெற்றிருக்கக்கூடிய இந்த உதகைக்கு நான் வந்திருக்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் இந்த உதகை மாவட்டத்தில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

என் வாழ்க்கையில் எத்தனையோ முறை ஊட்டி வந்திருந்தாலும், இந்த நீலகிரி மாவட்டத்திற்கு நான் வந்திருந்தாலும், முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலில் நடைபெறக்கூடிய அரசு நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்திருக்கிறேன். அப்படி வந்திருப்பதில் எனது உள்ளம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், ஊட்டியைப் போலவே என்னடைய மனதும் குளிர்ச்சியாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பான யுனெஸ்கோ, நீலகிரியை உயிர்க்கோள் காப்பகமாக அறிவித்திருக்கிறது. அத்தகைய உயிர்க்கோள் காப்பகத்தில் இந்த அரசு விழா நடைபெறுவது உள்ளபடியே பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது. நான் மூன்று நாட்களாக இந்த மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.


கோவையில் தொல்பொருள் கண்காட்சியையும், தமிழக அரசின் ஓராண்டு கால சாதனைகளையும் விளக்கி செய்தித்துறையின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்த கண்காட்சியை திறந்து வைத்த நான், அதைத் தொடர்ந்து கோவையிலே இருக்கக்கூடிய கொங்கு மண்டலத்தைச் சார்ந்திருக்கக்கூடிய தொழிலதிபர்களோடு விரிவான ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி இருக்கிறேன்.

நான் மட்டும் பேசி அவர்கள் கேட்பதாக இல்லாமல், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அவர்களை பேச வைத்து, அவர்கள் வழங்கிய அந்த ஆலோசனைகளைப் பெற்று, இந்த அரசின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு அந்த கோரிக்கைகள் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். மாவட்டத்தினுடைய எல்லையோரத்தில் மாலை நேரத்தில் நான் வருகிற போது வழியெங்கும் நின்று மக்கள் தந்த வரவேற்பு என்னை இன்னும் நான் ஆற்ற வேண்டிய பணிகளை ஊக்கப்படுத்தி இருக்கிறது.

சிறப்புமிக்க இந்த விழாவிலே 124வது மலர்க் கண்காட்சியை நேற்று காலையில் நான் துவக்கி வைத்தேன். அதற்குப் பிறகு மாலையில், முப்படைகளுக்கான ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்று நமது கம்பீரமான ராணுவத்தின் சிறப்பான மரியாதையை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதனுடைய தொடர்ச்சியாகதான் இந்த விழா, அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நம்முடைய ஆட்சித் தலைவர் அவர்களும், அவருக்கு துணை நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அரசு அதிகாரிகளும், அலுவலர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பொறுப்பிலே பணியாற்ற, பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை பிரதிநிதிகள், அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பான வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆகவே வரவேற்பு ஆற்றியிருக்கக்கூடிய நம்முடைய ஆட்சித் தலைவருக்கும், அவரை சார்ந்திருக்கக்கூடிய அரசு அலுவலர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய அரசு அமைந்த பிறகு இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு விழாக்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நான் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகிறேன். அதையொட்டி இந்த நீலகிரி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, 9500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய அந்த நிகழ்ச்சி இங்கே மிகப் பெரிய விழாவாக, இங்கே குழுமியிருக்கக்கூடிய மக்களைப் பார்க்கிறபோது எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால், இது அரசு விழாவா? அல்லது ஒரு பெரிய மாநாடா? என்று சந்தேகப்படுகிற அளவிற்கு இங்கே ஒரு எழுச்சியை நான் காணுகிறேன்.

நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைகிறபோதெல்லாம் நீலகிரி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை நம்முடைய அரசு ஆற்றியிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றாக தெரியும்.

உதகை ஏரியை 1970-ஆம் ஆண்டு புதுப்பொலிவோடு சீரமைத்து தந்தவரும், உதகையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை கட்டுவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்தவரும், முதுமலை சரணாலயத்தை விரிவுபடுத்தி அதை சிறப்பு செய்யவேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை கொடுத்ததும் முதலமைச்சர் கலைஞர் தான்!

இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்டபோது அங்கே இருந்து திரும்பியவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அதைத்தான் அவர்கள் தொழிலாக செய்து கொண்டிருந்தவர்கள் என்ற காரணத்தால்,

1970-ஆம் ஆண்டு கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் அவர்களைக் குடியமர்த்தி அழகு பார்த்தவரும் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தான். அதுமட்டுமல்ல, அவர்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தையும் தோற்றுவித்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தேயிலைச் சாகுபடி செய்யும் பணியை அவர்களுக்கு வழங்கினார்!

உதகையில் இளம் படுகர் நலச்சங்கம் கட்டிடத்தை இலவசமாகக் கட்டித் தந்த பெருமையும் தலைவர் கலைஞருக்கு உண்டு! 2008-ஆம் ஆண்டு தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடந்தபோது, தொழிலாளர்கள் கேட்ட தொகை 90 ரூபாய்தான். ஆனால், அதையும் தாண்டி 102 ரூபாய் வழங்க உத்தரவிட்டவர் நம்முடைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான்!

ஊட்டியில் பெரும்பான்மையாக வாழும் படுகர் சமூகத்தில் ஒரு பிரிவாக இருக்கும் துறையர் சமூகத்தினர் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு (MBC) கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையும் நிறைவேற்றித் தந்தவர் தான் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான்!

தேயிலை விலை வீழ்ச்சியடைந்த நேரத்தில், அந்த தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்கியவரும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தான்! நீலகிரியில் பழங்குடிவாழ் மக்கள் அவர்கள் வாழக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் "மின் இணைப்பு" மற்றும் இலவச வண்ணத் தொலைகாட்சிப் பெட்டிகளை வழங்கியவரும் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான்!

கூடலூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு "மின் இணைப்பு" வழங்கியவர் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான்! நான் கலைஞருடைய அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த நேரத்தில், உள்ளாட்சியில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அந்த கடை வியாபாரிகளுக்கு "கடை உரிமை" நீட்டிப்பு தந்து பெயர் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கினேன்.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் உதகைக்கு 3-வது குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்து உதகை மக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்த்து வைத்ததும் உதகை மக்கள் நிச்சயமாக மறந்திடமாட்டார்கள்.

இத்தகைய சாதனை சரித்திரத்தின் தொடர்ச்சியாகத் தான் இப்போதும் நம்முடைய அரசு அமைந்த பிறகு பல்வேறு பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டிருக்கிறது. எப்போது இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலும், தோள் கொடுப்பான் தோழன் என்பதைப் போல நீலகிரிக்கு உதவியாக உதவக்கூடிய அரசு தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு.

2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நீலகிரி மாவட்டத்தில், பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்டவர்கள் அதில் உயிரிழந்தார்கள். மிக மிக மோசமான இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட அந்தச் சூழலில், அப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார் நம்முடைய ராசா அவர்கள். உடனே தலைவர் கலைஞர் அவர்கள் அழைத்து நீ காரில் போனால், அல்லது விமானத்தைப் பிடித்துப் போனால், நேரம் ஆகும், நீ உடனடியாக ஹெலிகாப்டர் பிடித்து போய் சேர் என்று சொல்லி, களநிலவரத்தை பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பகுதியை பார்வையிட்டு வா என்று உத்தரவிட்டார்கள்.

அப்பொழுது, துணை முதலமைச்சராக இருந்த நானும், அந்த போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டேன்!

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட நீலகிரி நிலச்சரிவு மிகவும் மோசமானது. அதைக் கேள்விப்பட்டதும் இங்கு இருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர் முபாரக் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகவும் பதட்டமாக பேசிக்கொண்டிருந்தார். அதனால், உடனடியாக நான் நீலகிரிக்கு வந்தேன். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை மறுநாளே நான் வந்து பார்த்தேன். இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று நேரடியாகப் பார்த்தோம்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைப் பார்த்த பிறகு வீட்டை இழந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னோம். நடுவட்டம் இந்திரா நகரைச் சேர்ந்த அமுதா - சாதனா ஆகிய தாயும் மகளும் அந்த நிலச்சரிவில் இறந்து போனார்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ள உறவினர்களை சந்தித்து ஆறுதல் சொன்னோம்.

தொடர் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் சுமார் 350 கிலோமீட்டருக்கு சாலைகள் பழுதடைந்து இருந்தது. இதில், சுமார் 150 கிலோமீட்டர் பயணம் செய்து அப்போது நிவாரணப் பணிகளை நாங்கள் முடுக்கி விட்டோம்.

பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த மக்களைச் சந்தித்தேன். நீலகிரியே நிலச்சரிவால் நிர்மூலம் ஆகியிருந்ததை அன்றைக்கு நான் நேரடியாக பார்த்தேன். ஆட்சியில் அப்போது யார் இருக்கிறார்கள் என்றால் அதிமுக ஆட்சி. ஆட்சியாளர்கள் கூட அந்த நேரத்தில் உடனே வரவில்லை. முகாமில் தங்கி இருந்த மக்களுக்குத் திமுக சார்பில்தான் உதவிகளை செய்தோம்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதி, நம்முடைய கழகச் சட்டமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்று சுமார் ஏழரை கோடி ரூபாயை அந்த நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ஒதுக்கி பணிகளை செய்தோம் என்ற இந்த நேரத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

இதை இப்பொழுது நினைவூட்டக் காரணம் என்னவென்று கேட்டால், ஆட்சியில் இருக்கிறபோது செய்கிறோம். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் மக்களுக்குப் பணியாற்றிய ஒரு மாபெரும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழம் தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

இப்போது நம்முடைய கழக அரசு அமைந்த பிறகு, இந்த ஓராண்டு காலத்தில், இந்த நீலகிரி மாவட்டத்ற்கு எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கிறது. இயற்கை வளம் கொண்ட இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உங்களுக்கு இந்த அரசு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

இயற்கையும், மனிதனும் இயைந்து வாழும் இந்த வனப்பகுதிகளைப் பாதுகாக்க இங்கு மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய வனப்பரப்பைப் பெருக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதாவது தற்போது இருக்கும் வனப்பரப்பை 20.27 விழுக்காட்டிலிருந்து, 33 விழுக்காடாக உயர்த்த, நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நாம் தெரிவித்திருக்கிறோம்.

நமது மாநிலத்தின் வனப்பகுதிகளைப் பெருக்குவதோடு, வன விலங்கு காப்பகங்களைப் பராமரிக்கவும் அரசு கவனம் செலுத்தும். அந்த வகையில், முதுமலையில் இருக்கக்கூடிய புலிகள் காப்பகத்தில் இருக்கின்ற தெப்பக்காடு யானைகள் முகாமில், அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வளாகம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

தெப்பக்காடு யானைகள் முகாம், அது நூற்றாண்டு பழமையானது மட்டுமல்ல, ஆசியாவிலேயே முதன்முதலாக ஏற்படுத்தப்பட்ட முகாம் இது. இங்கே யானைகள் தொடர்பான மிக அதிக விவரங்கள், ஆய்வாளர்களால் சேகரிக்கப்படுகிறது. வளர்ப்பு யானைகள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களைப் பெறுவதற்கு இந்த மையம் ஒரு மிகச்சிறந்த இடமாக இது விளங்கிக் கொண்டு இருக்கிறது.

நமது காட்டு வளங்களை மீட்டுருவாக்கம் செய்யும் பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு அந்நிய களைத்தாவரங்களை அழித்தாக வேண்டும். இது உள்ளூர்த் தாவர இனங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதோடு, மாநிலத்தின் பல்லுயிர்ப் பன்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

அந்நிய களைத் தாவரங்களை அகற்ற இந்த அரசால் ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் நமது வனப்பகுதிகளின் தன்மை முறையாக பராமரிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

நீலகிரி மாவட்டப் பகுதி உழவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள நம்முடைய அரசு திட்டமிட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி, வாழை எனப் பலவகையான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பழவகைகள், கேரட், பீன்ஸ், லெட்யூஸ், வண்ண முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், இந்த மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் நறுமணப்பொருட்கள், காபி, இஞ்சி, பலா மற்றும் இதுபோன்ற பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது.

நீலகிரியில் குறிப்பிடத்தக்க வகையிலான சி.டி.சி தேயிலை மற்றும் தொன்மைவாய்ந்த தேயிலை வகைகள் உள்நாட்டுத் தேவை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு உள்ளூர் உழவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மையம் அமைக்கவும் நமது அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த மையம், மாவட்டத்தில் உள்ள இலட்சக்கணக்கான உள்ளூர் உழவர்கள் உற்பத்தி செய்யும் பழவகைகள், காய்கறிகள், தேயிலை, காபி, நறுமணப் பொருட்கள், பூக்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இந்த மையத்தில் வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உழவர்கள் இயற்கை வேளாண்மை செய்ய ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே வள மையம் ஒன்றும் அமைக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இந்த மாவட்டத்தில், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சுற்றுலா சார்ந்த தொழில்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சுற்றுலா வழிகாட்டிகள் (டூரிஸ்ட் கைடு), குதிரை சவாரி கூட்டிச் செல்பவர்களாக, சிறு உணவகங்களில் வேலை செய்பவர்களாக, வாடகை கார் ஓட்டுபவர்களாக, சிறு வியாபாரிகளாக எனச் சுற்றுலா சார்ந்த தொழில்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தான் இந்த அரசு முறையாக கணக்கெடுத்து, அவர்களுக்கெல்லாம் அடையாள அட்டைகள் வழங்கி தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களாகச் சேர்த்து, அந்த வாரியத்தின் அனைத்து வகையான நலத்திட்டங்களையும் பெற வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் இந்த விழாவில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பகுதி மக்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று - 17ஏ என்று சொல்லப்படும் பிரிவு வகை நிலங்களில் வீடுகட்டி குடியிருப்பவர்களுடைய பிரச்சனைகள். நம்முடைய ராஜா அவர்கள் கூட இங்கே பேசியபோது இதைப் பற்றி குறிப்பிட்டுச் சொன்னார்கள். அது பற்றியும், TANTEA செயல்பாடுகள் பற்றியும், நம்முடைய ராஜா அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், நமது ராமச்சந்திரன் அவர்கள், மாவட்டச் செயலாளர் முபாரக் அவர்கள், தொடர்ந்து இது பற்றி என்னிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் சென்னை போனதும், இதுபற்றி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தி நிச்சயம் இதற்கு தீர்வு காண ஒரு முடிவுகள் தர உறுதி எடுத்திருக்றோம்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு இந்த அரசு முதன்முறையாக, உதகமண்டலம், குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் அடங்கிய நீலகிரி மண்டல திட்டப் பகுதியை (Nilgiris Plan Area) இந்த அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான மண்டலத் திட்டத்தை (Regional Plan) தயாரிக்கும் பணிகள் இப்பொழுது நடந்து கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தைப் பாதுகாப்பது என்பது தமிழகத்தின் இயற்கையைப் பாதுகாப்பது சமம்! தமிழகத்தின் வனத்தை பாதுகாப்பது! தமிழகத்தின் அழகைப் போற்றுவது!

மலைகளும், மலைகள் சார்ந்த இடங்களும் கொண்ட நீலகிரியின் நிலத்தை இந்த அரசு காக்கும்! மலைகளோடு சேர்ந்து இந்த மக்களையும் கழக அரசு நிச்சயம் காக்கும்! "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று சொன்ன வள்ளலாரின் அறநெறியை ஆட்சி நெறியாகக் கொண்டிருக்கக்கூடிய இந்த அரசு, "திராவிட மாடல்" என்று நான் சொல்வதற்குள் அனைத்து மானுடத் தத்துவங்களும் இதில் அடங்கியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!