குன்னூர் அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

குன்னூரில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பவர்கள் கூட வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் 19 வது வார்டுக்கு உட்பட்ட கன்னிமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு ஒரே குடும்பத்தில் வசிக்கும் 5 பேரில் 3 பேருக்கு வாக்கு இல்லை. 2 பேர் மட்டுமே வாக்கு அளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இதேபோல் அப்பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் கூட வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில் அதிகாரிகளும் இதற்கு அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறகணிப்பதாக முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story