குன்னூரில் ஆசிரியர்களுக்கான அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு துவக்கம்
குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சியை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில், ஹைடெக் ஆய்வகங்களில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை, சிறந்த முறையில் மேற்கொள்ளுதல், கணினி கையாளுதல், இணையதளத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் திறன்வளர் பயிற்சி அளிக்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதில், பயிற்சிக்கு தேவையான வீடியோக்கள், மதிப்பீட்டு வினாக்கள் தயாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை வைத்து, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியே, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் கியூஆர் குறியீடு மாநில கருத்தாளர்களை வைத்து தேர்வு செய்யப்பட்ட, 10 மாவட்ட கருத்தாளர்களுக்கு, 30ம் தேதி வரை, ஐந்து நாட்கள் பயிற்சி குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக இந்த பயிற்சி மையத்தை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அடுத்த கட்டமாக, மாவட்ட கருத்தாளர்களாக பயிற்சி எடுத்தவர்களை வைத்து, குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற தாலுக்காவில் உள்ள 92 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல், பல்வேறு கட்டங்களில், ஐந்து நாட்கள் பயிற்சி வழங்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியால், ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்கும், புத்தகத்தில் உள்ள, கியூஆர் குறியீடுகளில் உள்ள எண்ம வளங்களை பயன்படுத்தி கற்பித்தல், இணையதளத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி பாடக் கருத்துகளை எளிதாக விளக்குதல் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் ஆகியோர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu