4 மாத ஊதியம் வழங்க வேண்டி தற்காலிக பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை

4 மாத ஊதியம் வழங்க வேண்டி தற்காலிக பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை
X

நான்கு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து குன்னூர் நகராட்சியை முற்றுகையிட்ட தற்காலிக பணியாளர்கள்

4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு தற்காலிக பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்

குன்னூரில் நகராட்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை மற்றும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட நபர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் நகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் கொரோனா பேரிடர் காலத்தில் வீடு வீடாக சென்று வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவு போன்ற பரிசோதனைகள் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளுவதற்காக நகராட்சி சுகாதார அதிகாரிகள் சார்பாக 120 நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டனர். பரிசோதனை செய்யப்படும் நபர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளால் இவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதில் நிரந்தர பணியாளர்கள் செய்யக்கூடிய பணிகளும் இவர்கள் செய்து வந்தனர். ஆனால் கடந்த 4 மாதங்கள் ஆகியும் இதுவரை இவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் அதிகாரிகளுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து பணியமர்த்தியுள்ளதாகவும், மீதமுள்ள 100 மேற்பட்டவர்களுக்கு நிலுவை தொகை வழங்காமல் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஏராளமான பெண்கள் நகராட்சி அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு குன்னூரில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் ஓரிரு நாட்களில் இவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள தொகையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story