ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்துத் தகர்ப்பு: சேவை ரத்து
மலை ரயில் பாதையில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகள்.
தொடர் மழை காரணமாகவும் ரயில் பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு ஆடர்லி ரயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு மலைப் பகுதியில் இருந்த ராட்சத பாறைகள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.
இதன் காரணமாக நேற்று காலை வழக்கம்போல் 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். .
இதனையடுத்து ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
தகவலையடுத்து ரயில் பாதையை சீரமைக்கும் பணிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட பி.டி. ரயிலில் கம்பரசர் எந்திரமும் கல்லாறு ரயில் நிலையத்தில் ஜே.சி.பி. வாகனமும் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டமலை ரயில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை அடைந்தது.
அங்கு மலை இரயில் இருப்புபாதை முதன்மை பிரிவு பொறியாளர் விவேக் குமார் உதவி பொறியாளர் கண்ணபிரான் ஆகியோர் மேற்பார்வையில் கம்ப்ரசரை இயக்கி பாறையில் 15 இடங்களில் துளையிட்டு வெடிமருந்துகள் நிரப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராட்சத பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டது. வெடி வெடித்ததில் ராட்சத பாறை வெண் புகையுடன் தூள்தூளாக சிதறி ரயில் தண்டவாளத்தில் விழுந்தன.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். மாலை நேரம் இருட்டத் தொடங்கியதால் சீரமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் ரயில் பாதையை சீரமைக்கும் பணி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகவும் ரயில் பாதையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் ஊட்டி-குன்னூர், குன்னூர்- ஊட்டி ரயில் சேவை தொடர்ந்து நடைபெறும் என்றும் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu