ஹெலிகாப்டர் விபத்திற்கு உயர்மின் அழுத்த கம்பிகள் காரணம் இல்லை: மின்வாரியம்
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த ராணுவ அதிகாரிகள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலத்த தீ காயத்துடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங் சிகிச்சைகாக பெங்களூருவில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் நேற்று சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க நீலகிரி மாவட்ட ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் தலைமையில் விசாரணை குழு அமைக்கபட்டுள்ளது. அந்த குழு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான உடன் மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் , 108 ஒட்டுநர்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்பட பலரிடம் சாட்சி விசாரணை நடைப்பெற்று வருகிறது.
குறிப்பாக குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு கடைசியாக படம் பிடித்த கோவையை சார்ந்த நாசர் என்பவரின் செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர், கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் அப்பகுதியில் மின் கம்பங்கள் ஏதேனும் சேதமடைந்துள்ளதா? உயர் மின் அழுத்த கம்பிகள் அந்த வழியில் உள்ளதா என்ற விவரத்தை கேட்டு நீலகிரி மாவட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு கடந்த 11-ம் தேதி கடிதம் அனுப்பியது.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்து, காவல்துறைக்கு விளக்கம் அளித்து உள்ளனர். அதில், ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட உடன் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்கு உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் இல்லை. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை லாஸ் பால்ஸ் நீர்வீழ்ச்சி அருகே தான் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கிறது.
விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் தெருவிளக்குடன் கூடிய மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் சேதம் அடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் பகல் நேரத்தில் மின்சாரம் இருக்காது. மாலை 6 மணிக்கு மேல் தானியங்கி மூலம் தெருவிளக்கு எரிய மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது உட்பட 13 கேள்விகளுக்கு மின்சார துறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தனிப்படை போலீசார் இதுவரை 80 -பேரிடம் விசாரணை செய்துள்ளனர் . இதனால் ஹெலிகப்டர் விபத்து குறித்த போலிசாரின் விசாரணை விரிவுபடுத்தபட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu