அபாயகரமாக கட்டுமான பணியை ஆய்வு செய்த ஆட்சியர்
குன்னூரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.
நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டுபாடுகள் அரசு சார்பாக விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தவும், பாறைகள் உடைப்பதற்கும், ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலை சரிவு, நிலச்சரிவு, நீரோடை மற்றும் செங்குத்தான பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த விதிகளை மீறி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிகள் நடந்து வருகின்றன.
இதனிடையே குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் கடந்த ஒருமாத காலமாக இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணிகள் காரணமாக அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நடைபாதை இடிந்து விழுந்தது. அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் வீடுகள் அனைத்தும் அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளன. தற்போது அந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் 3000 மண் மூட்டைகள் அடுக்கி இதற்கான பணிகளை தொடர்ந்துள்ளனர்.
இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தற்போது மழை காலம் என்பதால் மீண்டும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க 15 நாட்களில் இந்த பணியினை முடிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கட்டுமான பணிகளில் விதிமீறி செயல்படும் நபர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu