குன்னூரில் பிளாஸ்டிக் பூக்களுக்கு தடை; விரைவில் அமல்படுத்த முடிவு
Nilgiri News, Nilgiri News Today- பிளாஸ்டிக் பூக்களுக்கு, விரைவில் தடை விதிக்க குன்னூரில் முடிவு (கோப்பு படம்)
Nilgiri News, Nilgiri News Today- குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று மன்ற அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் ஏகராஜ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் தமிழக அரசு சார்பாக மாதாந்திர மதிப்பூதியம் உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரமும், துணைத் தலைவருக்கு ரூ. 10 ஆயிரமும் நகரமன்றத் தலைவருக்கு ரூ.15 ஆயிரம் ஒதுக்கிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் விவாதம் நடந்தது.
தி.மு.க. கவுன்சிலர் ராமசாமி பேசும்போது, நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் முறையாக பணிகளை செய்யாததால், பல்வேறு பகுதிகளில் குப்பை தேக்கம் அடைந்துள்ளது. இதனால் எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்து. இதுகுறித்து, பலமுறை நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களிடம் கூறியும் முறையாக பணிகளை செய்யாததால் மக்கள் பாதிப்பதாக குற்றம் சாட்டினர்.
குன்னூர் மார்க்கெட் பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் முறையாக நுழைவுவாயில் கேட்டுகள் இல்லாமல் உள்ளது. பல கட்டிடங்கள் இடியும் அபாய நிலையில் உள்ளது. எனவே உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்றார்.
கவுன்சிலர் ஜாகீர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை உள்ள நிலையில், திருமணம் மற்றும் விழாக் காலங்களில் பிளாஸ்டிக் பூக்கள் அதிகமாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும், என்றார்.
இதற்கு பதிலளித்து கமிஷனர் ஏகராஜ் பேசுகையில், நகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அடுத்த மாதத்தில் இருந்து செயல்படுத்த முடிவு செய்வதாக, தெரிவித்தார். இதையடுத்து, மிக விரைவில் குன்னூரில் பிளாஸ்டிக் பூக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, தடை நடைமுறைக்கு வர உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu