போக்குவரத்து ஆய்வாளருக்கு அண்ணா விருது

ஊட்டியை சேர்ந்தவர் முரளி (58) தற்போது குன்னூர் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். காவல் துறையில் கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் துறை நான்காம் அணியில் அடிப்படை காவலர் பயிற்சி பெற்றவர். தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆயுதப்படையில் பணியமர்த்தப்பட்டார். தடகள வீரரான இவர் காவல்துறைக்கு ஏழு முறை முதன்மை ஆட்ட நிலை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மாநில அளவிலான தொடர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் ஐந்து முறை முதலிடம் பெற்றுள்ளார். 1993ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற காவல்துறைகளுக்கு இடையேயான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார்.
தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு இவர் குன்னூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றிய போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் மற்றும் உடமைகள் காப்பாற்றியதற்காகவும், 2008ஆம் ஆண்டு கூடலூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றியபோது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியதற்காகவும் உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்றார்.
மேலும் 2004 முதல் 2010 வரை நீலகிரி மாவட்ட ஆயுதப்படை காவல் பிரிவின் மூலம் சென்னையில் நடந்த சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா உட்பட காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாக்களில் அணிவகுப்பு மரியாதை செலுத்த தலைமையேற்று வழி நடத்தியுள்ளார். மேலும் 2012ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் நீலகிரி மாவட்ட காவல் அணிவகுப்பு குழுவினரை வழிநடத்திச் சென்று முதலிடம் பெற்றார்.
இவரது கடின உழைப்பு மற்றும் சிறப்பான பணிக்காக 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக குடியரசு தினவிழாவில் வழங்க முடியாத நிலையில் இவருக்கு நேரடியாக காவல் துறை உயர் அதிகாரிகள் அண்ணா பதக்கத்தை வழங்கியுள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu