கூடலூர் அருகே கிராமப் பகுதியில் வனத்துறை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

கூடலூர் அருகே கிராமப் பகுதியில் வனத்துறை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
X

ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்யும் போலீசார்.

தொடர்ந்து மாடுகளைத் தாக்கும் புலியை வனதுறையினர் கூண்டு வைத்துப் பிடித்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கோழிக்கண்டி, கள்ளஞ்சேரி கிராமங்களில் அடுத்தடுத்து நான்கு மாடுகளை புலி தாக்கியதில் மூன்று மாடுகள் உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதோடு, ட்ரோன் கேமரா மூலமும் புலி நடமாட்டத்தை கண்காணித்தனர்.

இதனைத்தொடர்ந்து கிராமப் பகுதிகளிலும் அங்குள்ள தெருக்களிலும் புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கினர். அதில் கிராம மக்கள் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தனியாக வனப்பகுதிகளை ஒட்டி நடமாடக் கூடாது என்றும், இரு சக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் புலி நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி, அம்பலமுலை, கோழிக் கண்டி, கள்ளஞ்சேரி,தேவர்ஷோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன் தேவர்சோலை, பேரூராட்சிக்குட்பட்ட தேவன் நம்பர்- 1 பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் இப்பகுதி விவசாயிகளின் 20க்கும் மேற்பட்ட மாடுகள் புலி தாக்கி இறந்துள்ளன.

வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் புலியை கண்காணித்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஒரு பசுமாட்டை புலி தாக்கி கொன்றுள்ளது. கிராமப் பகுதிகளுக்குள் வந்து கால்நடைகளை தாக்கும் புலி வேட்டையாட முடியாத வயதான புலியாக உள்ளது. தற்போது இது கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. தொடர்ந்து மனிதர்களை தாக்குவதற்கு முன்பாக இந்தப் புலியை கூண்டு வைத்துப் பிடித்து வன உயிரின காப்பகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன் முதுமலை ஊராட்சி பகுதியில் புலி தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கடந்த வருடம் மசினகுடி பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற ஆதிவாசி பெண் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்தார். குறிப்பாக வேட்டையாட முடியாத வயதான மற்றும் உடல் ஊனம் ஏற்பட்ட புலிகள் இது போன்ற கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்குவது வழக்கம்.

எனவே ஸ்ரீமதுரை ஊராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து மாடுகளைத் தாக்கும் இந்த புலியை துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!