கூடலூர் அருகே அச்சுறுத்தும் புலி: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
பைல் படம்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சந்திரன் (52) என்ற தொழிலாளியை புலி தாக்கி இறந்த நிலையில் அந்த ஆட்கொல்லி புலியானது 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை தாக்கி கொன்று பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொது மக்களின் பாதுகாப்பை கருதி ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கோட்ட வன அலுவலர் பொறுப்பு போஸ்லே சச்சின் துர்காராம் மற்றும் வன அதிகாரிகள் வனத்துறை ஊழியர் கள் அடங்கிய 60க்கும் மேற்பட்டோர் மற்றும் மூன்று கால்நடை மருத்துவ குழுவினர் புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்ரனர்.
தொழிலாளியை தாக்கிய புலி, நேற்று மதியம் இதே தோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மாடு ஒன்றையும், இன்று ஒரு பசு மாட்டையும் அடித்து கொன்றது. மாடு இறந்த நிலையில் அப்பகுதியில் பரண் அமைத்து வனத்துறையினர் புலி அப்பகுதிக்கு வருகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர். மேலும் இன்று காலையில் புலி அப்பகுதியில் நடமாடுவதை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இன்னாசென்ட் திவ்யா வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து புலியை பிடிக்கும் நடவடிக்கைகள் முடியும் வரை இப்பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தேவர்சோலை ஊராட்சி பணியாளர்கள் மூலம் தனிக்குழு அமைத்து வீடுகளுக்கு நேரில் வழங்கவும், அதுவரை இப்பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தை நிறுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டம் காரணமாக புலி வேறு பகுதிக்கு இடம் மாறிச் சென்றால் புலியை பிடிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆங்காங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu