தருமபுரியில் பிடிபட்ட யானை நீலகிரி முதுமலையில் விடப்பட்டது

தருமபுரியில் பிடிபட்ட யானை லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானை விளை நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. குறிப்பாக விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தும், கிராமப்புறங்களில் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் வனத்துறை கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் இந்த காட்டு யானை தர்மபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டுயானை 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையாகும்.

இந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விட கொண்டுவரப்பட்டது.ஏற்கனவே விநாயகன், குரோபர் உள்ளிட்ட உள்ளிட்ட ஆட்கொல்லி யானைகளை முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டு வந்து விட்டதற்க்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் விட கூடலூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக இன்று காலை சீகூர் வனப்பகுதியில் அந்த யானை விடுவிக்கப்பட்டது.வாயில் காயம் ஏற்பட்ட நிலையில் யானைக்கு சிகிச்சை அளிக்காமல் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட்டது கடும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

Tags

Next Story