விளைநிலங்களுக்கு மின்வேலி அமைக்க அனுமதி கட்டாயம்; வனத்துறையினர் தகவல்
Nilgiri News, Nilgiri News Today- விளைநிலங்களுக்கு மின்வேலி அமைக்க அனுமதி கட்டாயம். (கோப்பு படம்)
Nilgiri News, Nilgiri News Today-நீலகிரி மாவட்டம், கூடலூர் காப்புக்காட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள விளைநிலங்களுக்கு மின்வேலி அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனவிலங்குகள் முதுமலை புலிகள் காப்பக வனச்சரகங்கள், நீலகிரி வன கோட்டத்துக்கு உட்பட்ட வன எல்லையோர பகுதிகளில் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் மின்னழுத்த வேலிகளால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. வனவிலங்குகளை பாதுகாக்க மின் வேலிகள் அமைப்பதற்காக தரப்படுத்தப்பட்ட அளவுகோலுடன் கூடிய விதிமுறைகளை நிர்ணயிப்பது இன்றியமையாததாகும். அதே வேளையில் காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளால் சேதமடையும் விளைபொருட்களை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலனை பேணுதலும் அவசியம்.
இதன் முதல் முயற்சியாக தமிழ்நாடு அரசு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகளை அறிவித்து அரசிதழ் வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் மின் வேலிகள் மற்றும் சூரிய சக்தி மின்வேலிகளை பதிவு செய்வதையும், தரப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும் வழிவகுக்கும்.
அரசு அறிவித்துள்ள விதிகளின் முக்கிய அம்சங்கள்
சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயமாகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வது கட்டாயம். இந்த விதிகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக் காடுகளில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள விளைநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். மின்வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின்வேலிகளுக்கும் இவ்விதிகளில் நிர்ணயிக்கப்பட்டு உள்ள பி.ஐ.எஸ். தர நிலைகளான பி.ஐ.எஸ்.-302-2-76 (இந்தியா) விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
காப்புக்காட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் ஏற்கனவே மின் வேலிகளை அமைத்திருப்பவர்கள் தங்கள் மின்வேலிகளை அந்தந்த பகுதியில் உள்ள வன அலுவலர்களிடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறும்போது, இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மின்வேலி அமைப்பது குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது, என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu