கோத்தகிரி பகுதியில் யானை நடமாட்டம் அதிகரிப்பு; மக்களுக்கு எச்சரிக்கை
Nilgiri News, Nilgiri News Today- குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதிகளில், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (கோப்பு படம்)
Nilgiri News, Nilgiri News Today- கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டு உள்ளனர். இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது வழக்கம். இந்த சுவை மிகுந்த பலாபழங்களை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பலா மரங்களில் சீசன் காரணமாக கொத்துக்கொத்தாக பலா பிஞ்சுகள் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக வந்து இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. சீசன் முடிந்த பிறகு மீண்டும் சமவெளி பகுதிக்கு சென்று விடும். தற்போது காட்டு யானைகள் முள்ளூர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு இருக்கின்றன. அந்த காட்டு யானைகள் அவ்வப்போது சாலைகளிலும் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், குஞ்சப்பனை சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் இருந்து வந்து முகாமிட்டு உள்ளன. மேலும் அவை சாலையில் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளன. எனவே, கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்ப்பதுடன், யானைகளுக்கு தொல்லை கொடுக்கவோ அல்லது செல்போனில் படம் பிடிக்கவோ முயற்சி செய்யக்கூடாது.
இதேபோல ஆதிவாசி கிராம மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் ஒன்றாக செல்ல வேண்டும். தனியாக செல்லக்கூடாது, என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu