மீண்டும் காட்டு யானைகள் நடமாட்டம்: மக்கள் பாடு திண்டாட்டம்!

காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வருவதால், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தக்கோரி, கூடலூர் பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கூடலூரை அடுத்த தேவாலா அட்டி, வாளவயல் சுற்றுவட்டார பகுதிகளில், இரு வாரங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் வீடுகளை சேதம் செய்து வந்த இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அவற்றை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

இதில், பொம்மன் என்ற யானைக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனையால், இரு தினங்களுக்கு முன், முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. வில்சன் என்ற கும்கி யானைக்கு, மதம் பிடித்ததால் அந்த யானை தேவாலா அட்டி பகுதியை ஒட்டிய கரியச்சோலை அரசு தேயிலைத் தோட்டப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த யானையை, மீண்டும் முதுமலைக்கு கொண்டு செல்வதற்கு, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காட்டு யானைகளை விரட்டுவதற்காக அழைத்து வரப்பட்ட கும்கிகளுக்கு மதம் பிடித்துள்ளதால், யானையை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு, சாடிவயல் முகாமில் இருந்து ஏற்றி செல்லும் வகையில் லாரி கொண்டுவரப்பட்டு உள்ளது. நேற்று இந்த யானையை கொண்டு செல்வதற்கான வழி முறைகள் குறித்து வனத்துறையினர் மற்றும் முதுமலையில் இருந்து வந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

யானைக்கு மயக்க ஊசி போட்டு லாரியில் ஏற்றிச் செல்வதா அல்லது கரும்புகளை கொடுத்து லாரிகளில் ஏற்றி அழைத்துச் செல்வதா என்பது குறித்து, ஆய்வு செய்த நிலையில், யானை பாகனுடன் ஒத்துழைக்காததால் நேற்று அந்த யானையை லாரியில் ஏற்றும்முடிவை கைவிட்டு உள்ளனர்.

இதனிடையே, காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வர தொடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், கும்கி யானைகளுக்கும் பிரச்சினை நிலவுவதால், அவற்றை வைத்து காட்டு யானைகளை விரட்ட முடியாத இக்கட்டான நிலை, வனத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் துவங்கி மே மாதம் வரை காட்டு யானைகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது. வனத்துறையினர் யானைகளை விரட்டவும் அவை ஊருக்குள் வராமல் தடுக்கவும் தற்காலிக நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.

வன எல்லைப்பகுதியில் அகழிகள் அமைத்து மின் வேலி பாதுகாப்புடன் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று, கூறினர்.

Tags

Next Story
ai solutions for small business