கூடலூர் அரிசி ராஜா காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் அரிசி ராஜா காட்டு யானை.
கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை, பாடந்துறை, புளியம்பாறை, நாடுகாணி, தேவாலா அட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சுற்றித்திரியும் அரிசி ராஜா என்ற காட்டு யானை அடிக்கடி வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.
வீடுகளை உடைத்து வீட்டில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை உண்டு பழகிய இந்த யானையை வனத்துறையினர் எவ்வளவு விரட்டினாலும் வனப்பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் ஊருக்குள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
யானையை கண்காணிப்பதற்காக வனத்துறை சார்பில் கும்கி யானைகள் கிராம எல்லைகளில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த போதிலும் வேறு வேறு இடங்களை மாற்றி வனத்துறையை ஏமாற்றி வீடுகளை உடைத்து சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது அரிசி ராஜா என்ற காட்டு யானை.
ஆதிவாசி பழங்குடியின மக்கள் விவசாயிகள் இந்த யானையால் வீடுகளை இழந்து பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த யானையால் உடைக்கப்படும் வீடுகளுக்கு இழப்பீடு கிடைப்பது இல்லை எனவும்,எனவே இந்த குறிப்பிட்ட அரிசி ராஜா என்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது முதுமலை வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் போராட்டங்கள் நடத்தியும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாடந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு உள்ள யானை தினசரி ஒரு வீட்டை இடித்து வருகிறது. எனவே வீடுகளை உடைத்து பழகிய இந்த யானையை வனத்துறையினர் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து முதல் கட்டமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் கண்டனத்தை தெரிவித்த நிலையில்,தங்களது கோரிக்கையை ஏற்று இந்த யானையை பிடித்து செல்லாவிட்டால் மேலும் அடுத்த கட்ட போராட்டங்கள் தொடரும் என பொது மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அரிசி ராஜா காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகளுடன் 2 ம் நாளாக இன்றும் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu