தொற்று பரவல்: கூடலூரில் நீலகிரி கலெக்டர் ஆய்வு
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோக்ககாடு, நிம்மினி வயல் மற்றும் வேடன் வயல் ஆகிய நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளையும், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பாண்டியாறு, நாடுகாணி அஞ்சல் அலுவலக பகுதி, பந்தலூர் ஹட்டி மற்றும் மார்க்கெட் சாலை ஆகிய நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, இன்ரு நேரில் ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கலெக்டர் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தி, பரிசோதனைகளை விரிவுப்படுத்தியுள்ளோம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் முதல் தொடர்பு, இரண்டாம் தொடர்பு என பரிசோதனைகளை விரிவுபடுத்தியுள்ளோம். நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 14 நாட்கள் வெளியில் வருவதையும், வெளிநபர்கள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிக்கு கட்டாயம் செல்லவதையும் தவிர்க்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் தங்களது இருப்பிடங்களுக்கே சென்று வழங்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அக்கார்டு பழங்குடியினர் மருத்துவமனைக்கு கூடலூர் ரோட்டரி கிளப் சார்பில் 25 மெத்தைகள், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கப்பட்டது. மேலும் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மார்னிங் ஸ்டார் நர்சரி பள்ளியில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்டு அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தையும் அவர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, கூடலூர் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்). சாம்சாந்தகுமார், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் லீனா சைமன், கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், கூடலூர் வட்டாட்சியர் தினேஷ், பந்தலூர் வட்டாட்சியர் தினேஷ்குமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமார மங்கலம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu