கல்லீரல் பாதிக்கபட்டு உயிருக்கு போராடும் 9 மாத குழந்தை
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் வரை தேவை படுவதால் அரசின் உதவியை கோரும் பெற்றோர்கள்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள எருமாடு, ஒனிமூலா வசிப்பவர்கள் பிரபாகரன், சத்தியா தம்பதியினர். இவர்களுக்கு ஜெயபிரபா என்கின்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குழந்தைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சை முடிந்து நிம்மதியாக வீடு திரும்பிய பிறகு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தைக்கு அடிக்கடி வயிறு வீங்கியும், உணவு உட்கொள்ளாமல் இருந்திருக்கிறது.பெற்றோர்கள் குழந்தையை கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் கல்லீரல் முழுவதுமாக பாதிப்படைந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்து மாற்று கல்லீரலை பொருத்த வேண்டும் என கூறிவிட்டனர். அந்த அறுவை சிகிச்சை வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் மட்டும்தான் மேற்கொள்ள முடியும் எனவும், அதற்காக 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் தெரிவித்து இருக்கின்றனர்.
செய்வதறியாது வீடு திரும்பிய குழந்தையின் பெற்றோர்களுக்கு அந்த ஊர் மக்கள் தற்சமயம் ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள். கடந்த 2 நாட்களில் மட்டும் ஊர் மக்கள் குழந்தையின் வீடு தேடி சென்று தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்கள். இரண்டு தினங்களில் மட்டும் ரூபாய் 80,000 வரை சிகிச்சைக்காக கிடைக்கப் பெற்றிருக்கிறது.
அத்தோடு குழந்தையை எருமாடு பகுதியில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் வசதியும் அந்த ஊர் மக்களால் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் நிலையில் அரசு தங்களுக்கு உதவ முன்வர வேண்டுமென குழந்தையின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதல்வரும், சுகாதார துறை அமைச்சரும் குழந்தையை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu