கூடலூரில் 108 ஆம்புலன்ஸ் வர தாமதம்: ஆதிவாசி முதியவர் சாவு

கூடலூரில் 108 ஆம்புலன்ஸ் வர தாமதம்: ஆதிவாசி முதியவர் சாவு
X

ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளிக்க வந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள்.

கூடலூரில் 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஆதிவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலைப் பகுதியில் ஆதிவாசி குடியிருப்பு உள்ளது.

இங்கு வசித்து வந்தவர் மாதன் ( 67). இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக கிளம்பியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக 108 வாகனத்திற்கு தகவல் அளித்தும் வாகனம் வர தாமதமாகியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்து தனியார் ஜீப்பில் பெரிய சூண்டி பகுதி வரை கொண்டு வந்துள்ளனர்.

அப்பகுதிக்கு வந்த ஆம்புலன்சில் ஏற்றி மீண்டும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் மாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகவும், சிறிது நேரம் முன்பாகக் கொண்டுவந்து இருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாதனின் உறவினர்கள் கூறுகையில், திடீரென மயக்கம் போட்டு விழுந்த நிலையில் அவருக்கு முதல் உதவி செய்து பார்த்தோம். பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தோம். ஆனால் ஆம்புலன்ஸில் டீசல் இல்லை என்பதால் வர தாமதமாகும் என்று தகவல் வந்தது.

இதனையடுத்து அங்கிருந்து தனியார் ஜீப்பில் ஏற்றி பெரிய சூண்டி பகுதிக்கு கொண்டு வந்தபோது தான் ஆம்புலன்ஸ் வந்தது.

கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது மருத்துவர் தாமதமாகி கொண்டு வந்ததால் உயிரிழந்துள்ளார் என்றும் சிறிது முன்பாக கொண்டு வந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

மாதன் மயக்கம் அடைந்து சுமார் மூன்று மணி நேரம் கழித்தே மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க முடிந்தது.

ஆம்புலன்ஸ் வருவதற்காக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தோம் சரியான நேரத்தில் வந்து இருந்தால் மாதனை காப்பாற்றியிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கூடலூர் ஆர்டிஓ விடம் புகார் அளிக்க உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வந்தனர். அலுவலகத்தில் ஆர்டிஓ., இல்லாததால் நேர்முக உதவியாளர் கிராம மக்களின் புகாரை பெற்றுக் கொண்டார்.

பின்னர் அங்கு வந்த தாசில்தார் சித்தராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் புகார் அளிக்க வந்தவர்களிடம் பேச்சு நடத்தி இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் இப்பிரச்சினை குறித்து திங்கள்கிழமை ஆர்டிஓ முன்னிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தனர்.

இதனையடுத்து உறவினர்கள் இறந்த மகனின் உடலை பெற்றுக்கொண்டு கிராமத்திற்கு திரும்பினார். 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஆதிவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!