நீலகிரியில் ஒரு மாதத்தில் 10 புலிகள் உயிரிழப்பு; வனத்துறையினர் அதிர்ச்சி

நீலகிரியில் ஒரு மாதத்தில் 10 புலிகள் உயிரிழப்பு; வனத்துறையினர் அதிர்ச்சி
X

Nilgiri News- உயிரிழந்த நிலையில் புலிக்குட்டிகள்.

Nilgiri News- நீலகிரி மாவட்டத்தில், ஒரு மாதத்தில் 10 புலிகள் உயிரிழந்திருப்பது, வனத்துறையினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரக எல்லையான சின்னக்குன்னூர் பெந்தட்டி அருகில் உள்ள வனப்பகுதியில் கடந்த 14-ம் தேதி 4 புலிக்குட்டிகள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வனத்துறையினர் குழு அமைத்து புலிக்குட்டிகளை தேடி வந்தனர்.

இதில் கடந்த 17-ம் தேதி சின்னக்குன்னூர் வனப்பகுதியில் ஒரு ஆண் புலிக்குட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டி உடலை பிரேத பரிசோதனை செய்து, ஆய்வுக்காக உடல் உறுப்புகளை கோவைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், தாய்ப்பால் கிடைக்காததால் புலிக்குட்டி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மற்ற 3 புலிக்குட்டிகள் மற்றும் தாய்ப்புலியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் சின்ன குன்னூர் வனப்பகுதியில் ஏற்கனவே புலிக்குட்டி இறந்து கிடந்த பகுதியில், மேலும் 2 பெண் புலிக்குட்டிகள் இறந்து கிடந்ததை நேற்று வனத்துறையினர் கண்டறிந்தனர். அங்கு சற்று தொலைவில் ஒரு பெண் புலிக்குட்டி சோர்வான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டது. இறந்து கிடந்த 2 புலிக்குட்டிகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியில் எரிக்கப்பட்டது. தொடர்ந்து புலிக்குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளித்து, கூண்டில் வைத்து வனத்துறையினர் பராமரித்து வந்தனர். அதுவும் சிகிச்சை பலனின்றி இறந்தது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில்,புலிக்குட்டிகள் தனியாக இருந்ததால் தாய் புலியின் நிலையை அறிவதற்காக, 40 பேர் அடங்கிய 4 குழு அமைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் புலிக்குட்டிகள் இறந்து கிடந்த பகுதியில் கடந்த 18-ந் தேதி ஒரு மானின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. எனவே, மான் கிடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டம் உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 4 குட்டிகளுடன் தாய் புலி சுற்றித்திரிந்ததை சின்ன குன்னூர் பகுதி பொதுமக்கள் பார்த்து உள்ளனர். ஆனால், சில நாட்களாக தாய் புலியின் நடமாட்டம் இல்லாததால், அதன் நிலை என்ன என்று தெரியவில்லை. நீலகிரி வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 புலிகள் இறந்து உள்ளன. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி சீகூர் வனப்பகுதியில் 2 புலிக்குட்டிகள், ஆகஸ்ட் 17-ம் தேதி நடுவட்டம் பகுதியில் ஒரு புலி, ஆகஸ்டு 31-ம் தேதி முதுமலை வனப்பகுதியில் ஒரு புலி, கடந்த 9-ம் தேதி அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் இறந்து கிடந்தன. தற்போது சின்ன குன்னூர் வனப்பகுதியில் 4 புலிக்குட்டிகள் இறந்து உள்ளன. தொடர்ந்து புலிகள் இறக்கும் சம்பவத்தால் வனத்துறையினர், வன ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!