வனத்துறையினருக்கு டாட்டா -தப்பியோடிய காட்டு யானை
முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு சிகிச்சைக்காக கால்நடை பயணமாக அழைத்துச் செல்லப்பட்ட ரிவால்டோ யானை செல்லும் வழியில் தப்பி ஓடி மீண்டும் வாழைத்தோட்டம் பகுதியில் முகாமிட்டுள்ளதால் யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாக ஊருக்குள் சுற்றி வந்த ஆண் காட்டு யானையை பிடித்து முதுமலையில் வைத்து பராமரிக்க வேண்டும் என வனத்துறையினர் முடிவு செய்து இருந்தனர். இருப்பினும் யானையின் உடல் நலனை கருத்தில் கொண்டு மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் காட்டுயானைக்கு தர்பூசணி, வாழைப்பழம், அன்னாசி, கரும்பு, பசுந்தழைகள் ஆகியவை வழங்கியவாறு வாழைத்தோட்டத்திலிருந்து மாவனல்லா, பொக்காபுரம் விபூதிமலை வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வனத்துறையினர் அளித்த பழங்களைத் உண்டவாறு காட்டு யானை நடந்தது.
இதனால் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்ததாக வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்த நிலையில், மூன்றாவது நாளாக ஆச்சங்கரை என்ற பகுதியில் இருந்து மசினகுடி வழியாக முதுமலைக்கு காட்டுயானையை அழைத்துச் செல்லும் பணியை மேற்கொண்டபோது, மன்றாடியார் என்ற இடத்திற்கு காட்டு யானை மாலை 4 மணிக்கு வந்தடைந்தது. திடீரென யானையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காட்டுயானை அங்கிருந்து திரும்பி சென்றது.
இதை தடுக்க வனத்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் சிறிதுநேரத்தில் காட்டுயானை வனத்துறையினரிடம் இருந்து தப்பி அங்கிருந்து வேகமாக ஓடியது. இதனால் வனத்துறையினரும் காட்டுயானையை பின்தொடர்ந்தனர். இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறுகையில் பல ஆண்டுகளாக ஊருக்குள் முகாமிட்டு பொதுமக்களுடன் வாழ பழகிய காட்டு யானை ரிவால்டோவை தற்போது முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் பாதுகாப்பாக வைக்க திட்டமிடப்பட்டது.
இதனால் பழங்களை வழங்கி முதுமலைக்கு அழைத்துச் செல்லும் பணி நடைபெற்றது. இதில் 50 சதவீதம் அளவிற்கு வெற்றி பெற்ற நிலையில் யானை தப்பி ஓடி மீண்டும் வாழைத்தோட்டம் பகுதியிலேயே முகாமிட்டுள்ளது, உயரதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu