தமிழ்க்கடலில் முத்தெடுக்கும் 'நீச்சல்காரன்' : இளைஞர்களின் முன்மாதிரி

Neechalkaran
X

Neechalkaran

Neechalkaran-தமிழ் எழுத்துப்பிழைகளை திருத்தும் மென்பொருள் கண்டுபிடித்த நீச்சல்காரன் என்ற முன்மாதிரி இளைஞனைப் பற்றிய தொகுப்பு.

Neechalkaran-தனக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களை நேர்மறை சாதனைகளாக்கிய வித்தகன், இந்த நீச்சல்காரன். யார் இந்த நீச்சல்காரன்?

அவரைப்பற்றிய ஒரு சிறு தொகுப்பு. இளைஞர்களின் முன்னோடியாக விளங்கும், அந்த இளைஞனின் சாதனைகள் இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அல்லது ஒரு ஊன்றுகோலாக அமையலாம். சாதனைத் தடத்தில் பயணிக்க வழி வகுக்கலாம்.

நீச்சல்காரன், தன்னை அறிமுகம் செய்துள்ள எளிமைமிகு வரிகள் :

'வணக்கம்,

வைகைக் கரையில் பிறந்தவன்;

கொளவாய் ஏரிக்கரையில் கிடப்பவன்;

தமிழருவியில் குதித்துப் பழகும் சிறுவன்;

இந்திய மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருவன்;

திரைகடலோடி உங்கள் நட்புக்களைத் தேட,

வலைக்கடலில் வலைவிரித்து நீந்துகிறேன்.' என்று அறிமுகம் செய்து கொள்கிறார்.

இயற்பியல் மாணவன் :

நீச்சல்காரன் நிசப் பெயர் ராஜாராமன். மதுரை மண்ணுக்கு சொந்தக்காரர். மதுரை ஜெயஹிந்த்புரத்தில் பிறந்தவர். தாய் இல்லத்தரசி. தந்தை ஒரு பரஸ்பர நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மதுரை கேசிஏ அருணாச்சலம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, மதுரை யாதவர் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றவர்.

அவர் படித்த கல்லூரியில் ஒரு நிறுவனத்தின் வளாக நேரடித்தேர்வில் தேர்வுசெய்யப்பட்டு செங்கல்பட்டில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணி செய்கிறார். இயற்பியலில் பட்டம் பெற்ற ஒருவர் தமிழுக்கு இவ்வளவு பெரிய பங்களிப்பை தர முடியுமா என்ற ஆச்சர்ய கேள்வி யாருக்கும் எழாமல் இருக்க முடியாது.

எதிர்மறை சிந்தையை நேர்மறையாக்கிய வித்தகன் :

தமிழ்நாட்டைவிட்டு சிறிது காலம் வெளிமாநிலத்தில் பணிபுரிந்த காலங்களில், தனிமை அவரை வாட்டியது. தாய்மண்ணை பிரிந்த துயரம் நெஞ்சில் வடுக்களாக வீழ்ந்தபோது, அவைகள் கவிதை எனும் விதைகளாக முளைவிடத் தொடங்கின. அந்த கவிதைகளை அவருக்குப் பிடித்த 'நீச்சல்காரன்' என்னும் பெயரில் வலை தளத்தை உருவாக்கி அதில் பதிவிடத் தொடங்கினார்.

நம்மவர்கள் கவிதைகளை வாசித்து அதில் விமர்சனங்களை அள்ளித்தெளித்தனர். அவைகளில் பெரும்பாலும் நீச்சல்காரன் கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தன. அதையே தனக்கு சாதகமாக்கினார். சிந்திக்கத் தெரிந்தவனின் முதல் மூச்சு. ஏன் எழுத்து தவறுகளை திருத்தும் ஒரு மென்பொருள் கருவியை உருவாக்க கூடாது என்ற புதிய சிந்தை உருவானது.

படைப்பாளியின் மனம் அல்லவா? மொழியையும், தொழில்நுட்பத்தையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார். ஒரே நேரத்தில் இலக்கணம் மற்றும் தொழில்நுட்ப அறிவைத் தேடினார். இலக்கணம் கற்றார். அந்த முயற்சியில் உருவானதே நாவி என்கிற எழுத்துப்பிழை திருத்தும் மென்பொருள் கருவி.

முழுமை பெறாத கருவி எனினும் அவரது முயற்சிக்கு வரவேற்பு கிடைத்தது. பேராசிரியர் ஒருவர் அவரைப் பாராட்டி,சில திருத்தங்களை வழங்கினார். அந்த வழிகாட்டுதலால் மீண்டும் முழுமைபெற்ற நாவி உருவானது. அதைத்தொடர்ந்து வாணி என்னும் மென்பொருள் உருவானது. அவரது கண்டுபிடிப்புகள், நாவி சந்திப்பிழை திருத்தி, வாணி பிழை திருத்தி, தமிழிணைய பிழைதிருத்தி,பேச்சி - மொழிபெயர்ப்புக் கருவி,சுளகு - எழுத்தாய்வுக் கருவி,ஓவன் - ஒருங்குறி மாற்றி,மென்சான்றிதழ் உருவாக்கும் கருவி,வாணி தொகுப்பகராதி,விக்கி உருமாற்றி என இன்னும் நீள்கிறது.

விருதுகள் :

இவர் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள சேவையை, கனடா வாழ் இலங்கைத் தமிழர்கள் பாராட்டி விருது வழங்கி சிறப்பித்தனர். இலங்கைத் தமிழர்களுக்கு மொழிப்பற்று அதிகம். அந்தவகையில் அவர்கள் நீச்சல்காரனுக்கு தகுதியான விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.

அதன் பின்னரே 2019ம் ஆண்டில் நீச்சல்காரனுக்கு தமிழக முதல்வரின் கணினித்தமிழ் விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் விருது பெற்றபின்னரே தமிழகத்தின் அறியப்பட்ட நபராக உருவானார். புகழும் சேர்ந்தது.

வலைத்தளங்கள் கொண்டாடும் இளைஞன் :

விக்கிப்பீடியா ஆர்வலர். கல்லூரிகளில் மாணவர்களுக்கு தன்னார்வலராக கலந்துகொண்டு விக்கிமீடியா குறித்த கருத்துரைகளை வழங்கிவருகிறார். திரள் எனும் செய்திகள் திரட்டும் தளம், நீச்சல்காரன் கவிதை தளம் என நீள்கிறது அவரது திறமையும்,ஆற்றலும். தொழில்நுட்பங்களை மொழி வளமைக்கு பயன்படுத்தும் புதிய நுட்பத்தை கண்டறிந்த வகையில், அவர் இந்த தலைமுறையின் சிறந்த இளைஞன் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

சிறப்புகளின் உறைவிடம் நீச்சல்காரன் :

முதல் சிறப்பு, அவர் கண்டுபிடித்த இந்த பிழைதிருத்தும் மென்பொருள் கருவிகளை வணிகரீதியாக பயன்படுத்தாமல் சமூக சிந்தையோடு,தமிழுக்கு செய்த தொண்டாக கருதி அதை எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்திருக்கிறார்.

இன்னொரூ சிறப்பு. அவருடன் பேசும்போது ஒரு இடத்தில் கூட ஆங்கில மொழி கலக்காமல் பேசுகிறார். அதுவும் அவருக்கான தனிச்சிறப்பு. பேசும்போது பண்பும் மிளிர்கிறது.

தமிழ் வளர்த்த மதுரை :

தமிழ் மொழி வளர்க்க சங்கம் வைத்த மதுரையில் இருந்து ஒருவர் தமிழ்மொழி பங்கம் (பிழை) நீக்க மென்பொருள் கண்டுபிடித்திருப்பது மதுரைக்கு மட்டுமல்ல தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. உலகத்தமிழர் போற்றும் உன்னத இளைஞனாக விளங்கும் நீச்சல்காரனுக்கு, இன்ஸ்டாநியூஸ் செய்தி தளத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil