பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு: 4பேர் கைது
பள்ளிபாளையம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கூறி கிராம மக்கள் சகோதரர்கள் இருவரை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள மோள கவுண்டன்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போய் விடுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இரவு நேரங்களில் கிராமத்தை பாதுகாப்பதற்காக வலம் வந்தபடி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை ஆடு திருடர்கள் என நினைத்த கிராமத்து இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் மயக்கம் அடைந்த நிலையில் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, இளைஞர்கள் இருவரும் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் அண்ணன் தம்பி என்றும், அண்ணன் ராஜ்குமார் தம்பி கார்த்தியும் தனது நண்பர்களை சந்திப்பதற்காக இரவு 10 மணிக்கு பாலக்கவுண்டம்பாளையம் வந்தது தெரிய வந்தது. இரண்டு இளைஞர்களையும் தவறாக நினைத்த கிராம மக்கள் பலமாக தாக்கியதில் இருவருக்கும் கைகள் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதுடன் உடல்நிலை பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் சிகிச்சை பலனின்றி அண்ணன் ராஜ்குமார் நேற்று இரவு உயிரிழந்தார்
இதன் காரணமாக போலீசார் மோளக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த 14 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களில் நாகராஜ், குமரேசன், கந்தசாமி மற்றும் செங்கோட்ட பூபதி ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிராம மக்கள் இளைஞர்களை திருடர்கள் என்று நினைத்து தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu