குமாரபாளையத்தில் முன்னோர்கள் ஆசி வேண்டி எமதீப வழிபாடு
குமாரபாளையத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி சபரிநாதன் தலைமையில், நேற்றிரவு எமதீப வழிபாடு நடைபெற்றது.
தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு, யமதீப திரயோதசி எனப்பெயர். அன்று மாலை, எமதர்ம ராஜாவை வழிபட வேண்டும். அதாவது மண் அகலில் நல்லெண்ணை விட்டு விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். அவ்வகையில், முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வைக்கும் எமதீப வழிபாடு, குமாரபாளையத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி சபரிநாதன் தலைமையில் , நேற்றிரவு நடைபெற்றது.
இதுபற்றி, சபரிநாதன் கூறியதாவது: எமதீப வழிபாடு என்பது, மன்னர் காலத்தில் மிக விமர்சையாக நடத்தப்பட்டது. முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற செய்யக்கூடியது. தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடத்தப்படுவது வழக்கம். குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் முதன்முறையாக இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
வழக்கமாக, கிழக்கு நோக்கிதான் தீபங்கள் ஏற்றுவார்கள். ஆனால் எம தீபம், தெற்கு திசை நோக்கி ஏற்றப்பட வேண்டும். முன்னதாக காவிரி தாய்க்கு பூக்களை தூவி வணங்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு நபரும் 10க்கும் மேற்பட்ட தீபங்கள் கூட ஏற்றி, கற்பூர ஆரத்தி காட்டி, காவிரி ஆற்றில் மிதக்க விட வேண்டும்.
புரட்டாசி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறோம். அவர்கள் சொர்க்கம் செல்ல புறப்பட தயாராகும் போது, எம தீப வழிபாட்டின் மூலம் அவர்களின் நல்லாசியை வேண்டி வழிபடுகிறோம். அவர்களும் நமக்கு நல்லாசி தருவார்கள். நம் சந்ததிகள் முன்னேற்றம் காணும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், நிர்வாகிகள் ராஜேந்திரன், இளங்கோ, பூபதி உள்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu